கட்டுரை

போரிடத் தவறிய ராஜகுமாரன்!

செங்குட்டுவன் தம்பி

இந்திரா காந்தியைத் தலைவராகக் கொண்டு உருவாகி இருக்கும் புதிய கட்சியில் இணைந்த அனைத்து காங்கிரஸ்காரர்களும் கட்சியை விட்டு

நீக்கப்படுவதாக காங்கிரஸ் செயற்குழு தீர்மானிக்கிறது&

ஜனவரி 3,1978 ஆம் ஆண்டு காங்கிரஸ் காரிய கமிட்டி செயல்படுத்திய தீர்மானத்தின் ஒற்றை வரி தான் இது.

தொடர்ந்து கட்சியின் அப்போதைய தலைவர் கே. பிரம்மானந்த ரெட்டி தேர்தல் கமிஷனுக்கு எழுதிய கடிதத்தில், சட்டப்படியும் அரசியல்

சாசனப் படியும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் நானே. ‘இந்திய தேசிய காங்கிரஸ்' என்ற பெயரில் எந்த அமைப்பு உருவானாலும் அது

சட்டத்துக்கும் அரசியல்சாசனத்துக்கும் புறம்பானது, என்று குறிப்பிட்டுள்ளார்.

அச்சமயத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லை, தான் வழி நடத்திய தேர்தலில் மோசமான தோல்வியை சந்தித்ததால் நேர்ந்த நிலை என்று இது தொடர்பாக இந்திரா காந்தியின் மேல் அனுதாபப் படுபவர்கள் உண்டு.

இந்திரா காந்தி ஏற்கெனவே இதுபோன்ற ஒரு

சவாலான தருணத்தை சந்தித்துள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக இருந்த இந்திரா காந்தியை, குடியரசுத் தலைவர் தேர்தலில் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராக செயல்பட்டதன் தொடர்ச்சியாக, 12 நவம்பர் 1969 அன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் நிஜலிங்கப்பா தலைமையிலான காங்கிரஸ் காரிய கமிட்டி கட்சியை விட்டு நீக்கியது.

இவ்வாறு இரண்டு முறை நீக்கப்பட்ட போதும் தனது முழு சக்தியைத் திரட்டி போராடிய இந்திராகாந்தி, பெரும்பான்மையான கட்சி தலைவர்களை தன்பக்கம் தக்க வைத்தார்.  அடுத்து வந்த மார்ச் 1971 (43.68%), ஜனவரி 1980 (42.69%) தேர்தல்களில் பிரம்மாண்ட வெற்றிகளை குவித்து கட்சி மற்றும் ஆட்சியில் தனக்கான இடம் கேள்விகளுக்கு அப்பாற்பட்டது என்பதை சொல்லாமல் தெளிவுபடுத்தினார்.

போரில் வென்றவர்களை மன்னராட்சி காலத்தில் கொண்டாடினர். தற்போது ஜனநாயகத்தில் தேர்தலில் போராடி வெல்பவர்களை கொண்டாடுகிறார்கள்.

வாக்கு அரசியலில் நம்பிக்கையுள்ள கட்சிகளை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்பவர்களே நல்ல தலைவன் என்று அடையாளப்படுத்தும் சூழலில் காங்கிரஸின் இன்றைய நிலையை முன்னிறுத்தி கட்சியை எப்படி ஜெயிக்க வைக்கலாம் என்பதை நிர்வாகவியல் கோணத்தில் அணுக முனைந்திருக்கிறேன். ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட  சன் சூ (Sun y zu) என்ற சீன ராணுவ தளபதியின் 'The Art of War' ன் குறிப்புகளின் அடிப்படையில்.

எதிரி தயார் நிலையில் இல்லாதபோது தன்னை தயார்ப்படுத்திக்கொண்டு தாக்குபவனே வெற்றி பெறுவான்.

(He will win who, prepared himself, waits to talk the enemy unprepared - sun t zu)

நேரு காலத்தில் காங்கிரஸ் முதலில் ஆட்சியை இழந்த மாநிலம் கேரளா (ஏப்ரல் 1957ல்). ஆனால் கேரளாவில் தேர்தல் விட்டு தேர்தல் காங்கிரஸ் வென்று வருகிறது. 1967&இல் தமிழகம், 1977 இல் மேற்கு வங்கம் ஆகியவை இந்திரா காலத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்த மாநிலங்கள். 1989 இல் உத்தரப் பிரதேசத்தையும், 1990 இல் பீகாரையும், 1995 இல் குஜராத்தையும், இரண்டாயிரத்தில் ஒடிசாவையம் இழந்தது காங்கிரஸ். சுமார் இருபது முதல்

53 ஆண்டுகள் வரை காங்கிரஸ் மீண்டும்

ஆட்சியைப் பிடிக்க முடியாத இந்த ஆறு மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 247. இது மொத்த தொகுதிகளில் 45.5 சதவீதம். களநிலவரத்தை அறிவது தலைவன் தன்னை தயார் செய்துகொள்வதன் முதல்படி.

போரில் மிகமுக்கியமானது வேகமாகச் செயல்படுவது

(Quickness is the essence of the war - Sun t zu)

நெருங்கிய நண்பர்களின் மனவோட்டத்தைக் கூட அறியாத தலைவன் மக்களின் மனதை புரிந்து கொள்வது கடினம். ஜோதிராதித்ய சிந்தியா தனது சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து காங்கிரஸின் பெயரை நீக்கிய உடன் தடுப்பு நடவடிக்கை எடுத்திருந்தால் மத்திய பிரதேசத்தில் ஆட்சி கவிழ்ந்திருக்காது. இதே காலம் கடந்த நடவடிக்கை கர்நாடகம் முதல் ராஜஸ்தான் வரை இழப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் நிதானமாக எடுக்கப்பட வேண்டிய ஒழுங்கு நடவடிக் கைகள் வேகமாக எடுக்கப்படுகின்றன.

உதாரணமாக என்டிடிவி தொலைக்காட்சி விவாதத்தில் பங்குபெற்ற காங்கிரஸ் பிரமுகர் சஞ்சய் ஜா மனதில் பட்டதை பேசிவிட்டார். சிறிதுநேரத்தில் அதே தொலைக்காட்சியை அவர் பார்த்தபோது கட்சியை விட்டு அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அறிவிப்பு ஓடிக்கொண்டிருந்தது!

நன்றாக பயிற்சிபெற்ற திறமையான தளபதிகளும் வீரர்களும் கொண்ட படைக்கே வெற்றி கிடைக்கும்

(Victory usually goes to the army who has better trained officers and men - Sun t zu)

லால் பகதூர் சாஸ்திரி மறைந்த ஜனவரி 1966 இல் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய பொறுப்பு  காங்கிரஸ் தலைவர் காமராஜரிடமிருந்தது. எஸ்.கே.பட்டீல், அதுல்யா கோஷ் போன்றோர் காமராஜரை பிரதமராக வலியுறுத்தினர். மொரார்ஜி தேசாய் பிரதமராக வருவதற்கு தீவிரமாக

முயற்சித்தார். அப்போது வியூகம் வகுத்த, பிரதமர் பதவி மீது ஆசையற்ற காமராஜர், பொறுப்புகளை டி.பி.மிஸ்ரா, அதுல்யா கோஷ், எஸ்.கே.பட்டீல், ஜக்ஜீவன் ராம் என்று பலருக்கு பிரித்தளித்தார். முக்கிய தலைவர்கள் பம்பரமாக சுற்றி சுழன்றனர். மொரார்ஜி தேசாயால் தனக்கு குஜராத் மற்றும் உ.பியில் மட்டும் ஆதரவு பெற முடிந்தது 355 : 169 என்ற ஓட்டு விகிதத்தில் இந்திராகாந்தியை காமராஜர் பிரதமர் ஆக்கி அழகு பார்த்தார்.

காமராஜர், இந்திராகாந்தி போன்ற வலிமையான தலைவர்கள் காங்கிரஸில் குறைந்ததும், இருந்தவர்கள் எதிர் முகாமிற்கு இடம்பெயர்ந்ததும் காங்கிரஸின் பலவீனத்திற்கு காரணம். தலைவர்களையும் படைகளையும் வார்த்

தெடுக்காமல் டுவிட்டரில் மட்டும் செய்யும் போர்களால் வாக்குகளை குவிக்க முடியுமா?

திறமைவாய்ந்த படைகளையும் திறமை குன்றிய படைகளையும் நடத்துவதற்கு அறிந்தவனே வெற்றிபெறுவான்

(He will win who knows how to handle both superior and inferior forces - Sun t zu)

1969 ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸின் மூத்த தலைவர்களின் வேட்பாளராக சஞ்சீவி ரெட்டியும், பிரதமர் இந்திராவின் விருப்பமாக வி.வி.கிரியும் இருந்தனர். இந்நிலையில் 12, ஜூலை

1969 இல் காங்கிரஸ் பார்லிமென்டரி போர்டு கூட்டம் பெங்களூருவில் நடந்தது. சிலர் நடுநிலை வகிக்க சஞ்சீவி ரெட்டிக்கு ஆதரவாக நான்கு ஓட்டுகளும், வி.வி.கிரிக்கு ஆதரவாக இரண்டு ஓட்டுகளும் விழ, சஞ்சீவி ரெட்டி வேட்பு மனு தாக்கல் செய்தார் காங்கிரஸ் சார்பாக. எதிர்பாராதவிதமாக வி.வி.கிரி சுயேட்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்ய ஆளும்கட்சி எதிர்க்கட்சி வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காங்கிரஸின் சிண்டிகேட் தலைவர்கள் சஞ்சீவி ரெட்டியை ஜெயிக்க வைக்க வேண்டி ஜனசங்கம், சுதந்திரா கட்சிகளிடம் ஆதரவு திரட்ட, இந்திரா காந்தியின் ஆதரவாளர்கள் காங்கிரசுக்குள்ளும் வெளியே திமுக, அகாலிதளம் மற்றும் பல கட்சிகளிடமும் ஆதரவு திரட்டினர். முக்கியமான திருப்பமாக இந்திரா காந்தி தரப்பில் கடந்த காலங்களில் காங்கிரஸிலிருந்து பிரிந்து போன பங்களா காங்கிரஸ் (மேற்கு வங்காளம்), பிகேடி

(உ.பி, பீகார், ம.பி,ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா), கேரளா காங்கிரஸ்,  ஜன காங்கிரஸ் (ஒடிசா), லோக்தந்திரிக் காங்கிரஸ் தளம் (பீகார்), ஜனதா பக்‌ஷா (கர்நாடகா) ஆகிய கட்சிகளின் ஆதரவைத் திரட்டமுடிந்தது. இதனால் இந்திரா ஆதரித்த வி.வி.கிரி வென்று சிண்டிகேட் தலைவர்களின் தலையெழுத்தை மாற்றியமைத்தார்.

முழு படைக்கும் நம்பிக்கையுடன் ஒரு தலைவன் பொறுப்பேற்கவேண்டும். அனைத்துக்கும் மையமாக இருப்பதோடு

சிறந்த வெற்றிகளை அடைய படைகளை

திறம்படப் பயன்படுத்தவேண்டும்

(A Leader must confidently assume responsibility for the whole force. Be at the centre of eveything and use your troops in the most efficient way with the best result - Sun t zu)

நேரு குடும்பத்தில் இருந்து காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை வசப்படுத்தியவர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி. இதில் இந்திராவும் சோனியாவும் கட்சிக்குள்ளும் வெளியிலும் போராட வேண்டியிருந்தது. ஆனாலும் அவர்களது போராட்டங்கள் தேர்தல் வெற்றியைப் பெற்றதால் கட்சி கட்டுபட்டது.

2013 - இல் ராகுல்காந்தி அதிர்ஷ்டக்காரர். கட்சி அவருக்கு லட்டு போல் சிக்கலில்லாமல் சிரமமில்லாமல் கிடைத்தது. இனி ராகுல் போருக்குத் தலைமை தாங்கி வெற்றியை ஈட்டித்தருவார் என்ற நம்பிக்கை காங்கிரஸாரிடம் இப்போது இருக்கிறதா?

இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் எண்ணற்ற வெற்றி பெற்ற ஜனநாயக தலைவர்களின் வாரிசுகள் ராஜகுமாரர்களாக வலம் வந்துள்ளனர். தங்களது பெற்றோரை விட இவர்களுக்கு எல்லா விஷயங்களும் அனுகூலமாக அமைந்தும் வெற்றியை தவற விட்டு இருக்கிறார்கள். இந்தியாவில் அப்பா அமர்ந்த சிம்மாசனத்தில் சுயமாக போராடி இதுவரை நான்கு பேர் தான் அமர்ந்துள்ளனர். இந்த பட்டியலில் இன்னொருவர் சேரக்கூடும்.  மற்றவர்கள் எல்லாம் போராட தவறிய ராஜ குமாரர்கள்தான்.

ஆகஸ்ட், 2020.